RSS

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் களப்பிரர் காலத்தின் தாக்கம்

களப்பிரர் காலம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழக வரலாற்றில் இருண்ட காலமாக இது வர்ணிக்கப்படுகிறது. கலை, இலக்கியம் என்பவை இக்காலத்தில் செழுமை பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தென்னிந்திய வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி ‘சோழர்கள்’ எனும் தமது நூலில் சங்ககாலம் எனும் ஒளி அணைந்ததும், களப்பிரர் காலம் எனும் இருண்ட காலம் தொடங்கியது என குறிப்பிடுகிறார்.

தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலிலும் களப்பிரர்களை ‘நாகரிகத்தின் விசித்திரமான எதிரிகள்’ என்றும் ‘கொடுமையான ஆட்சியாளர்கள்’ என்றும் வர்ணித்துள்ளார். அதே சாஸ்திரியார்தான் ‘களப்பிரர்களைப் பற்றி எதையும் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை’ என்றும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய பல சரித்திர ஆய்வாளர்களும் களப்பிரர் காலம் சர்வாதிகாரம் மேலோங்கிய இருண்ட காலம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

களப்பிரர் காலத்தில் கலை, இலக்கிய துறைகள் நலிவுற்றுக் காணப்பட்டன. கே. கே. பிள்ளை தனது தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலே தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய நாடு ஆகியவற்றில் ஒன்றேனும் களப்பிரர்களின் கொடுமையில் இருந்து தப்பவில்லை. தமிழகத்திற்கு இவர்களால் ஏற்பட்ட குளப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கவியரசர்கள் எனக் கூறுகின்றார்.

களப்பிரர்கள் உண்மையிலேயே கவியரசர்களா? ஏன் இவர்களை பல வரலாற்று ஆசிரியர்கள் கொடுமையானவர்களாக சித்திரிக்கின்றார்கள். இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.

சங்க இலக்கியம் என்பது கி. மு. 500 லிருந்து கி. பி. 250 வரை எழுதப்பட்ட பாக்களையும் நூல்களையும் கொண்டது எனப் பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். எனவே சங்க இலக்கியப் பாடல்கள் தமிழக வரலாறு எனும் நீண்ட நெடும் பாதையின் பல்வேறு மைல்கற்களாக இருக்கலாம்.

அதனால்தான் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றாகிய ‘புற நானூறு’ என்னும் தொகை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில்,

‘மிகப்பழைய நூல்கள் எல்லாவற்றுக்கும் பழையதெனக் கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னே தோன்றிய செய்யுள்களும் பின் தோன்றிய செய்யுள்களும் தன்னகத்தே கொண்டு தமிழ் நாகரிகத்தின் தொன்மை உணர்த்தும் பெருநூலாக திகழ்வது இப்புறநானூறு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து சில சங்க இலக்கியப் பாக்கள் மிகப் பழமையானவை என்பதை அறியமுடிகிறது. இந்திய துணைக் கண்டத்தின் வடபகுதியில் பரவியிருந்த ஆரிய – திராவிட கலப்பு நாகரிகம் சங்க காலத்திலேயே தென்னகத்திலும் பரவியிருந்தது. அதுவே சமூகத்தில் செல்வாக்கும் பெற்றிருந்தது.

வட நாட்டிலிருந்து தென்னகத்துக்கு வந்த அகத்தியரைப் பற்றிய புராணக் கதைகளும், அதேபோன்று கேரளத்தை உருவாக்கியவர் வடபுலத்தைச் சேர்ந்த பரசுராமர்தான் என்ற கர்ணபரம்பரைக் கதையும் வெகு காலத்துக்கு முன்பே வடக்கிலிருந்து தெற்கிற்கு மக்கள் குடிபெயர்ந்து உள்ளனர் என்பதை விளக்குவதாக உள்ளது.

வடபுலத்திலிருந்து தென்னகத்தை நோக்கிய குடிப்பெயர்ச்சி கிட்டத்தட்ட கி. மு. 1000 ஆண்டிலிருந்தே தொடங்கி அசோகர் காலத்தில் முழுமை பெற்றிருக்கலாம் என்பது நீலகண்ட சாஸ்திரியின் கருத்தாகவுள்ளது.

வேத மதத்தின் அடிப்படை அம்சமாகிய யாகங்கள் புரிவதனை அன்று தமிழ்நாட்டு மன்னர்கள் பின்பற்றியுள்ளனர். அதாவது, ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற மதமாக வேத மதம் திகழ்ந்திருக்கிறது.

சங்க காலத்தில் தமிழகத்தில் வேத மதமே மேலோங்கியிருந்தது. பெளத்த, சமண சமயங்கள் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்த போதும், அவை அப்போது செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. இதனை தொல்காப்பிய செய்யுள்கள் எடுத்துக்காட்டுகின்றன. ‘வருணன் மேய பெரும்புனல் உலகமும்’ என்று வேதக் கடவுள்களுள் ஒன்றாகிய வருணன் அன்றே உள்ளூர்க் கடவுள்களில் ஒன்றாகியிருந்ததை எடுத்துக் காட்டுகிறது. இந்த நிலைதான் சங்க காலம் முடியும் வரை கி. பி. 250 வரை நீடித்திருக்கிறது. இதன் பின்னர் களப்பிரர் காலம் ஆரம்பமாகிறது.

களப்பிரர்கள் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களையும் வென்று தமிழகம் முழுவதையும் ஆண்டிருக்கிறார்கள். கி.பி. 250 இல் தொடங்கி கி. பி. 550 வரை முந்நூறு ஆண்டுகள் இவர்களது ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறது.

களப்பிரர்கள் யார்? தமிழர்களா? அல்லது அயலாரா? அயலார் என்றால் எங்கிருந்து தமிழகத்துக்கு வந்தார்கள்.

தமிழர்கள் என்றால் மூவேந்தர்களையும் வெல்லும் இவர்கள் சமுதாயத்தின் எந்தப் பிரிவினராய் இருந்தனர் என்ற வினாக்கள் ஆய்வுக்குரியன.

களப் பிறர் காலத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த அருணன் களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் பெளத்த, சமண சமயங்கள் மேலோங்கியிருந்ததாக குறிப்பிடுகின்றார்.

களப்பிரர்கள் பெளத்த, சமய சமயங்களை ஆதரித்தனர். மன்னர்களின் ஆதரவு பெற்ற மதங்களே செல்வாக்குப் பெறக்கூடியதாக இருந்தது. இதனை சரித்திர பேராசிரியர்கள் பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

களப்பிரர் ஆட்சி சுமார் கி. பி. 550இல் முடிவடைந்தது. மீண்டும் பாண்டியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. களப்பிரர்கள் பெளத்த, சமண சமயங்களை ஆதரித்தனர். அவர்களால் பாதிக்கப்பட்ட வேத மதத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் களப்பிரர்களை கலியரசர்கள், கொடுங்கோலர்கள் என வர்ணித்துள்ளனர்.

வட இந்திய சரித்திரத்தை ஆராய்ந்தால், வேத இந்து மதம் வர்ணாஸ்ரம முறையினைக் கடுமையாக அமுல்படுத்தியது. வேள்வி என்ற பெயரில் கால்நடைகள் பலியிடப்பட்டன. இவை மக்கள் மத்தியில் ஒரு சலிப்புத்தன்மையை தோற்றுவித்தது.

கி. மு. 500 ஆம் ஆண்டளவில் வட இந்தியாவில் பெளத்த சமண சமயங்கள் தோன்ற இவையே காரணமாக அமைந்தன. வர்ணாஸ்ரம அமைப்பின் நடுவே பெளத்த சமண சங்கங்கள் உருவாகி அங்கே அனைத்து வர்ணத்தவரும் சமமாக நடத்தப்பட்டனர்.

யாகசாலைகளில் நடந்த கால்நடைக் கொலைகளுக்கு எதிராக ஓர் இயக்கமே நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தின் பிரதிநிதிகளாகிய பெளத்த சமண துறவிகள் கொல்லாமை புலால் உண்ணாமையை வலியுறுத்தினர். பெளத்த - சமண சமயங்கள் போதித்த அறநெறிக் கருத்துக்கள் மக்களை மிகவும் கவர்ந்தன.

வட இந்தியாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் கூடுதலானவர்கள் பெளத்த சமண சமயங்களைத் தழுவினர்.

இதன் தாக்கத்தை திருக்குறளிலும் காண முடியும்.

‘கொல்லான் புலாலை மறுத்தானை

கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’

என வள்ளுவப்பெருந்தகை உயிர்க் கொலை செய்யாதிருப்பது பற்றி கூறி மாமிசம் உண்ணாதிருப்பது சாலச் சிறந்தது என்றும் கூறியுள்ளார்கள்.

அன்றைய காலத்தில் மதங்கள் வளர்ச்சி பெற வேண்டுமானால் மன்னர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. கெளதம புத்தர், மகாவீரர் போன்றோர் ஷந்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்து மதத்தை பிராமணர்களே வழிநடத்தினர். ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த புத்தர், மகாவீரர் போன்றோரின் கருத்துக்களால் மன்னர்களும் ஈர்க்கப்பட்டனர். அசோக மன்னர் காலத்தில் பெளத்தமதம் உச்ச நிலையை அடைந்தது.

தமிழிலே சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்ற ஐம்பெரும் காப்பியங்களை எழுதியவர்கள் பெளத்த சமண அறிஞர்கள் என்பதும் குறப்பிடத்தக்கது.

தமிழகத்திலே சங்க காலத்துக்கு பிற்பட்ட காலம் களப்பிரர்காலம் எனச் சொல்லப்படுகிறது. இக்காலப் பகுதியில் பெளத்த சமண சமயங்கள் செழிப்புற்றிருந்தன.

களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக மாத்திரம் இருக்கவில்லை. அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்களும் இருந்தன.

பெளத்த மதமும் சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்கணக்கு என்பதன் கீழ் வரும் பல இலக்கிய நூல்கள் களப்பிரர் காலத்திலேயே எழுதப்பட்டன.

இந்து மதம் என்பது ஏனைய மதங்களில் இருந்து நல்ல கருத்துக்களை உள்வாங்கி வளர்ச்சி பெற்று வந்துள்ளது. களப்பிரர் காலத்தில் நலிவுற்றிருந்த இந்து மதம் தான் நலிவுற்றதற்கான காரணங்களை கண்டறிந்து திருத்திக்கொண்டது. பல்லவர் காலம் பக்தி இலக்கிய காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழக வரலாற்றில் சைவமும் வைணவமும் வளர்ச்சிபெற்ற காலமாக இதனை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்ன காரணங்களுக்காக இந்து மதத்தை மக்கள் வெறுத்தார்களோ, அவற்றில் இருந்து இந்து மதம் தன்னை விடுவித்துக்கொண்டது.

பஞ்சமாபாதகங்கள் என அறக் கருத்துக்களை வலியுறுத்தியது. கொல்லாமை, புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற கருத்துக்களை சைவமும் வைணவமும் வலியுறுத்தின.

வேள்விகள் என்ற பெயரால் மிருகங்களை பலியிடுவது நிறுத்தப்பட்டது. சைவ உணவை உண்பவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டனர்.

நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் அவற்றை உள்வாங்கி வளர்ச்சி பெற்ற மதமாக இந்து மதத்தை கருத முடியும். இந்து மதத்தின் முக்கிய பிரிவுகளான சைவ சமயமும் வைணவ சமயம் கொல்லாமையை புலால் உண்ணாமையை தமது மதங்களின் முக்கிய கோட்பாடாக வலியுறுத்தின.

இதனால் பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியங்கள் பல தோன்றின. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சைவ, வைணவ மதங்களை வளர்த்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றி எழுதிய சேக்கிழார் பிராமணர்களை மட்டும் விதந்து போற்றவில்லை.

புலையர் குலத்தைச் சேர்ந்த நந்தனாரின் பக்தியை விதந்து போற்றுகின்றார். வேட குலத்தவரான கண்ணப்பரின் பக்தி பெரிய புராணத்தில் போற்றப்படுகிறது. எக்குலத்தவராக இருந்தாலும் இறைவனை அன்புகொண்டு வணங்குபவர்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் என்பதை சேக்கிழாரின் பெரிய புராணம் விபரித்துள்ளது.

இந்து மதத்தில் காணப்பட்ட உடன்கட்டை ஏறல் போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பின்னாளில் இல்லாது போயின. இந்து மதத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகள் சமயத்தின் பேரால் செய்யப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக போராடினர்.

பின்னாளில் தோன்றிய ராஜாராம் மோகன்ராய், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் இந்து மதத்துக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தினர்.

சமயத்தின் பேரால் செய்யப்பட்ட கொடுமைகளும் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களும் இந்து மதத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காக போராடினர். இதனால் இந்து சமயம் மேன்மை பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்த மகாத்மா காந்தி சத்தியத்தையும் அகிம்சையையும் வலியுறுத்தினார். தாழ்த்தப்பட்டோரை ஹரிஜனங்கள் அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார். விதவைகள் மறுமணம் செய்யலாம் என்று கூறினார்.

இதனை பழமைவாதிகள் எதிர்த்தாலும், இந்து மதம் சிறப்புர இவைகள் காரணமாய் அமைந்தன.

சங்ககால மக்கள் போருக்கும் காதலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

நோக்கமின்றி வாழ்ந்தனர். ஆனால் சங்க காலத்துக்கு பின்வந்த காலத்தில் எழுச்சி பெற்ற பெளத்த, சமண மதங்கள் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்தின.

இவை சிறப்புற்ற காலத்தில் தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டார்கள்.

பெளத்த, சமண சமயங்களின் கருத்துக்கள் சைவ, வைணவ சமயங்களிலும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தின.

எனவே அறநெறிக் கருத்துக்கள் தழைத்தோங்கிய களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என நோக்குவது பொருத்தமானதா?

இதுபற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கிய ஆய்வாளர்கள்தான் இதற்குரிய முடிவைத் தர வேண்டும்.

கூராயுதம் -தினகரன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 கருத்துகள்:

முல்லை அமுதன் சொன்னது…

nalla kaddurai.
vaazhthukkal.
mullaiamuthan
katruveli-ithazh.blogspot.com

கருத்துரையிடுக